Tuesday, July 14, 2009

நட்பு!

இன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி நான் ஒரு கதை சொல்லுறேன்.

சோமுவும் ராமுவும் பால்ய நண்பர்கள். சோமு பணக்கார வீடு பையன். ராமு ஏழை விவசாயி.

சோமுவுக்காக உயிரை கூட குடுப்பன் ராமு.
ராமுவுக்காக உயிரை கூட குடுப்பன் சோமு.

இருவருக்கும் திருமணம் ஆகி குடும்பம் குட்டின்னு செட்டில் ஆகிட்டாங்க..

சோமுவுக்கு அரிசி மண்டி வியாபாரம். ராமு மாதிரியான பல பேர்களிடமிருந்து அரிசி மூட்டைகளை வாங்கி விற்கும் வியாபாரி. சொல்லப்போனால் நேக்கான வியாபாரி! மக்களே,
சோமு பாக்குறதுக்கு நம்ம ரங்காராவ் மாதிரியே இருப்பான்!

ராமுவுடைய மனைவி தினம் நச்சரிசிகிட்டே இருப்பாள்...

"எத்தனை நாளைக்குத்தான் அரை வயரும் கால் வய்ருமா இருக்கிறது. நம்ம புள்ளங்களும் பெர்சாகிகிட்டே வாராங்க.." என்று பழைய கருப்பு வெள்ளை திரைப்படத்தில் வரும் கண்ணாம்பா மாதிரி சுருதி சேர்த்து பாடினாள்

ராமு: என்ன மகளே, ஆரம்பத்துலையே ஆரம்பிச்சுட்டாளா உங்க அம்மா இன்னிக்கு...

பல நாள் மண்டைய குடைஞ்சு (அங்க இங்க கேட்ட ஆலோசனைகள) மூளையில உதித்த தனது ஐடியாவை ராமுவிடம் சொன்னாள் அவன் மனைவி...

பலே! ஜூட்...

"ஏங்க நீங்களும் உங்க நண்பர் சோமு மாதிரியே ஒரு அரிசி கடை வையுங்க."
குடிச்ச தண்ணி புரையேற திடுக்கிட்டு, "அரிசி கடையா? அதுக்கு கொள்ள பணம் வேணுமே.. பணத்துக்கு நான் எங்க போக?"
உள்ளது வாய்க்கும் வயத்துக்குமே பத்தலையே.. முடவன் கொம்புத்தேனுக்கு எப்படி ஆசைப்பட?

உங்க நண்பர் சோமுவிடம் கொஞ்சம் பணம் கடனா கேளுங்க, நீங்க கேட்ட தராமலா போய்டுவாரு? - என்று வாழைப்பழத்தில் நைசாக ஊசி ஏற்றிவிட்டாள் ராமுவின் மனைவி!

"சோமு பரம்பரை பணக்காரன் அவன்கிட்ட நான் எப்படி பணம் கேட்க! மேலும் நான் அப்படி கேட்டல் அவன் என்னை பற்றி என்ன நினைப்பான்"

என்னங்க நீங்க, சொன்னாலும் கேக்கறது இல்லை, சொந்தமாவும் செய்யறது இல்லை - என்ற நமது பாரத பெண்களின் வழக்கமான டைலாக் ஒன்றை எடுத்துவிட்டாள்!

பல "முயற்சிகளுக்கு" பின் ஒருவாறாய் அவன் தலையில் அந்த "அரிசி கடை தொடங்கும்" எண்ணம் ஏற்றப்பட்டது!

பல பேரிடம் கடன் கேட்டு தோற்றான். பின்னர் முடிவில் சோமுவிடம் கேட்பதா வேண்டாமா என்ற எண்ணத்தோட சாலையில் நடந்து வந்தான்.

கடையாவது குடையாவது வேற வேலைய பாருப்பா - வழியில் பல அட்வைஸ் அருனச்சலங்கள், போறவன்-வர்றவன் எல்லாம் சொல்ல செய்வதறியாது விழித்தான்.

ஆனாலும் ஆணை/ ஆலோசனை கொடுத்தது தலைமைச்செயலகமாசே என்ன செய்ய!!

ஒ. பன்னீர்செல்வம் மாதிரி ஆணைக்கு கீழ்ப்படிவது மேல் என்று முடிவு செய்தான்!

ராமு தலைய சொறிந்தவாறே, பல முடிகளை இந்த சில நாட்களில் தானம் செய்த பின், ஒரு முடிவுக்கு வந்தவனாக சோமுவின் வீடு நோக்கி சென்றான்

ராமு சோமுவை நோக்கி " சோமு, எனக்கு சற்று பணம் கடனாக கொடு"

சோமு: "என்ன விஷயம் ராமு? நீ அப்படி அவசரமா கடன் கேட்கிறதற்கு என்ன வந்தது? எதற்காக இந்த பணத்தேவை? சொல்லுடா ராமு.. என்கிட்டே சொல்லு...

"சோமு, நான் உன்னைமாதிரி ஒரு அரிசி கடை தொடங்கலாமுன்னு இருக்கேன். அப்படி செய்தால் அதில் வரும் லாபத்தை கொண்டு எனது மகள்களின் திருமணத்தை நடத்திவிடுவேன். அதுக்குத்தான் உன்னிடம் கடன் கேட்கிறேன். வேறு பலரிடமும் கேட்டுவிட்டேன். அனால் யாரும் அத்தனை பணம் கொடுக்க முன்வரவில்லை.. ஏதேதோ சொல்லி தட்டி கழிச்சுட்டங்கடா"

ஹாலில் நடக்கும் இந்த சம்பாஷனையை தனது உள்ளறையில் இருந்தே மைக், ஸ்பீக்கர், வயர்லெஸ் டிவைசஸ் போன்ற எந்த உபகரங்களின் உதவி இல்லாமலே சோமுவின் மனைவியின் ஐம்புலன்களும் கேட்க உதவின.

என்னங்க, கொஞ்சம் இங்க வாங்களேன், இத கொஞ்சம் எடுத்து குடுங்க என்ற ஒரு வழக்கமான பெண்கள் ஃபார்முலாவை எடுத்துவிட்டாள்.

சோமுவும், சரி ராமு ஒரு நிமிடம் இரு என்று தனது தளமைச்செயலகத்தொடே உடனே தொடர்பு கொண்டான்.

மிகச்சில நிமிடங்களுக்கு பின்னர் சோமு, மன்னிச்சுக்கோ ராமு, இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. ஒரு அவசரத்தேவைக்காக நேத்து தான் அதை கொடுத்தேன். நீ நேத்து வந்திருந்தாயானால் அதை உனக்கே கொடுத்திருப்பேன்.

ஏமாற்றம் அடைந்தவனாய் அடுத்து வீட்டில் இருக்கும் 5000+ வாட்ட்ஸ் சவுண்ட் சிஸ்டத்தை எப்படி சமாளிக்கலாம் என்று திரும்பவும் தலையை சொறிந்தவாறே யோசித்தான்.

"சேம் ப்ளட்" ஸ்டோரி வீட்டுக்கு வீடு நடப்பதை
லேட்டா தெரிஞ்சுகிட்டாலும் லடேச்டா தெரிஞ்சுக்கிட்டா ஒரு பக்குவத்தோடு வீடு நோக்கி சென்றான்.


அதுக்கப்புறம் நடந்தவைகளை நான் உங்களது எண்ணங்களுக்கே விட்டுடறேன்!


சில மாதங்களுக்கு பின் ராமுவுக்கு மீண்டும் பணமுடை. இந்த தடவை வியாபாரம் செய்ய அல்ல அவனது மகளின் திருமனத்தேவைக்காக..

வழக்கமா எல்லோரும் அதாங்க அக்கம்பக்கம், நட்பு, சுற்றம் எல்லாம் சுத்தமா கைய விரிச்சுட்டாங்க!

அப்புறம் என்ன! வாய்ப்பாடு வாசிக்கப்பட்டது.

சோமு வீடு வந்தாச்சு.

ராமு, "சோமு எனக்கு உன்கிட்ட இருந்து ஒரு உதவி வேணும்டா"

சோமு உள்ளுக்குள்ள பயந்தவாறே.. (அடிபட்டு இருக்கான் பாருங்க! முன்ன ஒருக்கா இது மாதிரி நடந்ததோட பின் விளைவுகளை மீண்டும் ஞாபகபடுத்திக்கொண்டான் - [நியுட்டனின் மூன்றாம் விதி] ) என்னடா ராமு தயங்காம கேளுடா.."

ஹஆவ் - பின்னிசை....

சோமு! என் மகளுக்கு கல்யாணம் ஏற்பாடு ஆகி இருக்கு. எடமும் நல்ல எடம். அதுக்கு கொஞ்சம் பணம் வேணும்டா.. என்னோட நிலத்த வெச்சுகிட்டு கொஞ்சம் பணம் குடுடா.."

ராமுவின் பாக்கியம் இல்லை சோமுவின் நல்ல நேரம்!!
சோமுவின் மனைவி அங்கு இல்லை! அவள் அம்மாவீட்டுக்கு சென்றிந்தாள்

சோமு, "டேய் ராமு என்னடா இப்படி சொல்லீட்ட, நான் உன் நன்பேண்டா, உன் பொண்ணு கல்யாணம் என் பொண்ணு கல்யாணம் மாதிரிடா.."

இந்தாடா பணம், மேலும் எவ்வளவு வேணுமோ கேட்டு வாங்கிக்கோடா"

பணம் கிடைத்ததோடு, நட்பு மீண்டும் ஜெயித்தது கண்டு மகிழ்ச்சியோடு சென்றான் ராமு.

ராமு சென்றபின் சோமுவிடம் அவன் மகன்
"அப்பா! என்னப்பா இவ்வளவு பணம் அதுவும் சும்மா குடுத்திருக்கீங்க! அன்னிக்கு அவர் கடன் கேட்டு குடுக்கலை. இன்னிக்கு அவரு நெலத்த குடுக்கறேன்னு சொல்லியும் சும்மாவே குடுத்திருக்கீங்களே"

சோமு தன மகனிடம், " மகனே! ஒருவேளை அன்னிக்கு நான் பணம் குடுத்திருந்தா இவன் எனக்கு போட்டியா கடை நடத்தி இருப்பான். நான் போண்டி ஆகி இருப்பேன்! அப்புறம் நானும் யாருகிட்டயாவது கடன் கேட்க தெரு தெருவா சுத்தி வந்திருப்பேன்.

இது ஒரு நல்ல காரியத்திற்க்கு பயன்படும். மேலும் ராமு இப்போ வியாபார நோக்கத்தோடு வரலை. ஒரு புண்ணியம் பண்ணிட்டேன்னு நெனச்சுப்பேன். தவிர இது கருப்பு பணம் (கூட) செல்லம்!"

அப்பாவுக்கும் தன அம்மாவின் புத்தி வந்ததை எண்ணி சோமுவின் மகன் வாயடைந்து நின்றான்...


நீங்களும் அப்படி நிக்காம உங்க கருத்துக்கள, பின்னூட்டங்கள பதிங்க.

Sunday, June 28, 2009

பள்ளி பருவ தேசிய கீதம்

மன்னிக்கவும்! நான் நமது தேசிய கீதத்தை பழிக்கவில்லை; உண்மையில் மதிக்கிறேன்.

இந்த பதிவு நமது தேசிய கீதத்தை புண்படுத்த அல்ல...

ஆதலால் இதை ஒரு நகைச்சுவை பதிவாக எண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகின்றேன்

எனது பள்ளி பருவத்தில் நாங்கள் நமது தேசிய கீதத்தை இப்படி காமெடியாக பாடியதுண்டு..

"..ஜனங்களின் மனங்களில் பசிபிணி பஞ்சம்
பாருங்கள் இதுதான் இந்தியா

பஞ்சாப் பறக்குது பாரும் புரோட்டா
தாளிக்கத் தக்காளி குருமா

வெந்தயக் குழம்பாம் வெங்காய வடையாம்
ஊத்தாப்பம்னாலும் சரிதான்

இட்லி சட்னி மீது ஆசை..

தோசைவடை மசால்வடை கூட
ஜாங்கிரி இருந்தால் சரிதான்

இட்லி சட்னி சாம்பார்..
லாலல்லலா லல்லலாலா...

காப்பி!! காப்பி!! சுடசுடச் சுடக் காபி..."


யூ கெட் அவுட்.. (School disperse!)

சென்னை தொலைகாட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..

ஒரே ஒரு சேனல் மட்டும் கிடைக்கப்பெற்ற நாட்கள் உங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

அதில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள், முக்கியமாக ஏழரை மணி செய்தி சுருக்கம், சிலந்தி வலை, பிரதித்துவனி, சித்திரப்பாவை, இரயில் ஸ்நேகம், செய்தி மலர், ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்கு முன்னால் வரும் பதினைந்து முதல் இருபது நிமிட விளம்பரங்கள், நரசுஸ் காபி விளம்பரம், இரவில் ஒரு பகல், ஃபிளைட் நம்பர் 172, சரஸ்வதியின் செல்வன், எட்டு நாற்பது செய்திகள் மற்றும் பல...

அன்றைய தொலைக்காட்சி மீடியா பகட்டானதாக இல்லாதிருந்தது.

சரி வாங்க! நாம இங்க செய்தி வாசிப்பாளர்கள் மேல கொஞ்சம் லைட் அடிப்போம்.

அன்னிக்கி எல்லாம் பேப்பர்ல தான் செய்திகளை எழுதி தருவாங்க.. அதை நாம பாத்து படிக்கணும்.

பேப்பரையும் பாக்கணும், கேமேராவையும் பாக்கணும். எ லிட்டில் டஃப் டாஸ்க் ஃபார் லேடீஸ் யூ நோ!

முன்னாள் செய்தி வாசிப்பாளர்களது பட்டியலில் உள்ளவர்கள் இதோ கீழே:
ஆண்கள்
1.வரதராஜன்
2. செந்தமிழ் அரசு
3. இனியன்
4. தமிழன்பன்
5. நிஜந்தன்
6. எச். இராமகிருஷ்ணன் (வானமே எல்லை படத்துல ஊனமான ஒரு பாத்திரத்தில் வருவாரே.. அவரு தான்).

பெண்கள் (மேக் அப் முடிந்தவரை இடாத பெண் செய்தி வாசிப்பாளர்கள்):
1. ஷோபனா ரவி
2. சந்தியா ராஜகோபாலன்
3. ஃபாத்திமா (பாபு)

வாங்க கொஞ்சம் டீடேய்லா போவோம்..

செந்தமிழ் அரசு:அண்ணன் நரசிம்மாராவுக்கு நண்பர் போல. சிரிகாவே மாட்டாரு.. உர்ருன்னு மூஞ்சிய சீரியஸா வெச்சுகிட்டே செய்தி வாசிப்பாரு

வரதராஜன்:எஸ் வீ சேகர் நாடகதுல, சினிமால எல்லாம் நடிச்சவரு செய்தியும் வாசிப்பதில் கால வெச்சாரு.. இவரு ஒரு தொலைக்காட்சி நாடகத்துல வேற நடிச்சாரு. பேரு தெரியலை ஆனா " சொல்லடி சிவசக்தி இன்னும் மௌனமென்ன.." அப்படின்னு ஒரு டைட்டில் சாங் வர்ற நாடகம்.

தமிழன்பன்:இவரு பட்டிமன்றதுல எல்லாம் பேசுவாரு.. அந்த காலத்து ஜெமினி கணேசன் மாதிரி பென்சில்ல கொடு போட்ட மீசை வெச்சிருப்பாரு

விடு கழுத... நமக்கு ஆம்பிளயள பத்தி என்ன பேச்சு, வாங்க பெண்களை பத்தி பேசலாம்...

ஷோபனா ரவி:இந்த அம்மாவ மட்டும் ஒருத்தரும் மறக்க முடியாதப்பா...
சாமி! இன்னிக்கு ஷோபனா ரவி வரகூடதுப்பா என்று வேண்டும் கணவர்களும், இன்னிக்கி ஷோபனா என்ன புடவை கட்டிக்கொண்டு வருவாங்கன்னு ஆர்வமாய் வீட்டு பெண்மணிகளும் ஏங்க காரணமாய் இருந்த ஒரு பெண்மணி ஷோபனா ரவி.

"போக்கிரி" விஜய் ஸ்டைல அந்த காலத்துல செய்தி வாசிப்புகளத்துல ஃபாலோ பண்ணின அம்மிணி.
இந்த அம்மிணிக்கு ஒரு கொள்கை சார்வாள்:
ஒரு தடவ கட்டுன புடவையை அடுத்த தடவ கட்ட மாட்டங்க..

அநேகமா எல்லா இல்லத்தரசிகளும் சொன்ன ஒரு சொற்றொடர் இதுவா தான் இருக்கும். "இன்னிக்கு ஷோபனா ரவி என்ன புடவை கட்டி இருக்காங்கன்னு பாக்கணும்"

ஷோபனா ரவி செய்தி வாசிப்பதை கேட்பார்களோ இல்லையோ, அவர் கட்டி இருக்கும் புடவை டிசைனை கண்டு கண்கள் பனிக்க "இந்த அம்மாவுக்கு மட்டும் புடவை டிசைன் எங்கிருந்து தான் கிடைக்குதோ" என்று ஒரு ஏக்க டயலாக் விடுவார்கள் இல்லத்தரசிகள்.
ஒரு வேளை சொந்தமா ஜவுளி கடை வெச்சிருக்காஙகளோ என்னவோ.. சிலர் இப்படி கூட சொன்னதுண்டு.

சந்தியா ராஜகோபாலன்:இனிய குரலில் செய்தி வாதிக்கும் இனிய குயில். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் செய்தி வாசிக்கும் திறமை கொண்டவர்.

ஃபாத்திமா (பாபு):இந்த அம்மிணி செய்தி வாசிக்க வந்தாலே ஜாலி தான்...
கண்ணா சிமிட்டி ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க..
பல இளைஞர்கள் நெஞ்சை புடிச்சிபாங்க. பெயரில இருக்கே அந்த 'ஃ' அது ஆண்கள் இருதயத்துல ஒரு துளை போட்டுரும். சில சில்மிஷ சிரோன்மணிகள் ஃபாத்திமாவ ஆஅஹ்ஹ பாதிமானு படிப்பார்கள் பாக்கணுமே... (பக்கத்து வீடு அசோக் மாமா அப்படி தான் சொல்லுவாரு)

பள்ளி பருவத்துல நாங்க எல்லாம் இந்த அம்மிணி சிரிக்கும்போது முகத்துல விழுற குழிய பத்தி பேசியது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கு.

இந்த அம்மிணிய சித்திரப்பாவை நாடகத்துல வேற பாக்க ஒரு சான்சு கெடச்சுது.

என் நண்பன் கிருபாசங்கர் அவன் வீட்டுல ட்யூஷன் போறேன்னு சொல்லீட்டு எங்க வீட்டுல அவனும் ரவியும் வந்து சித்திரப்பாவை நாடகம் பாக்க வந்துடுவாங்க.

அப்புறம் இவுங்க தன்னோட கூட வேல பாக்குற பாபுவ காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு ஷாக் குடுத்தாங்க...
அது நம்ம இளைஞர்கள், ஜொள்ளர்கள் மற்றும் பல சபல சிரோன்மணிகளுடைய நெஞ்சுல வேல் பாச்சின செய்தியா இருந்தது என்பது கொசுறு தகவல்.. (அடிக்க வாராதீங்க!!!)